

திருப்பூர்:
திருப்பூர் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் அருக்காணி (71). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் கத்தி முனையில் அருக்காணியை மிரட்டி அவரை கட்டிப் போட்டு அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து சென்றான்.இது குறித்து திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அருக்காணி வீடு பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் அப்பகுதியில் நடமாடியது தெரிய வந்தது. அவனது உருவத்தை வைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அடகு கடைக்கு வாலிபர் ஒருவர் நகையை அடகு வைக்க வந்தார். அவர் மீது கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரது முகவரியை வாங்கி வைத்து கொண்டு பின்னர் வாருங்கள் என கடைக்காரர்கள் கூறி விட்டனர். அந்த முகவரியில் சென்று பார்த்த போது போலியானது என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அடகு கடைக்காரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வாலிபரையும் கடைக்கு வருமாறு அழைத்தார்.
கடைக்கு வந்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் கோவை சின்னதடாகம் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி மகன் நந்த குமார் (27) என்பது தெரிய வந்தது.
இவர் பூலுவப்பட்டியில் உள்ள ஒரு ஒட்டலில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. நகை பறித்த நந்த குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews