பிரம்மோற்சவ 2-வது நாள் விழா- திருப்பதியில் சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்

பிரம்மோற்வச விழாவின் 2-வது நாளான இன்று சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் கல்யாண உற்சவ மண்டபம், ரங்கநாயகர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
திருப்பதி கோவில்
திருப்பதி கோவில்
Published on

திருப்பதி:

திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தன்று முடிவுபெறும் வண்ணம் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது.

எப்போதும் பக்தர்கள் கூட்டத்துடன் நடைபெறும் பிரம்மோற்சவம் இந்தாண்டு கொரோனா விதிமுறைகளுக்கு உள்பட்டு தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று மாலை 5 மணிக்கு கொடி மரம் மற்றும் பலிபீடம் உள்ளிட்டவற்றுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பின்னர் கொடி மரத்துக்கு தர்பை புற்களால் நெய்யப்பட்ட பெரிய பாய் மற்றும் சிறிய பாய் உள்ளிட்டவையும், மாவிலைகளும் கட்டப்பட்டு, திருமண் அணிவிக்கப்பட்டது.

பின்னர் வேத பண்டிதர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களை பிரம்மோற்சவத்தைக் காண வரும்படி அழைப்பு விடுத்து, மீன லக்னத்தில் மாலையில் சுற்றிக் கட்டிய கருடக் கொடியை கொடி மரத்தில் ஏற்றினர்.

கொடியேற்றம் முடிந்த பின் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை பிரம்மோற்சவத்தின் முதல் வாகனமான பெரிய சே‌ஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு அவருக்கு பூஜைகள், ஆராதனைகள், வேதபாராயணம், திவ்யப்பிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. பின்னர், ஜீயர்கள் சாத்துமுறை நடத்தி ஆரத்தி அளித்தனர்.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் அங்கிருந்து ஊர்வலமாக கோவிலுக்குள் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கும் அவருக்கு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர்.

பிரம்மோற்வச விழாவின் 2-வது நாளான இன்று சின்ன சே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் கல்யாண உற்சவ மண்டபம், ரங்கநாயகர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

இன்று இரவு அம்ச வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருள்கிறார்.

வழக்கமாக பிரம்மோற்சவ விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து கிராமிய கலைஞர்கள் வந்து கோலாட்டம், மயில்லாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

மேலும் சாமியின் பல்வேறு அவதாரங்களை வெளிப்படுத்தும் விதமாக வேடங்களை அணிந்து பக்தர்கள் பங்கேற்பார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்துடன் திருமலை முழுவதும் பிரமாண்டமாய் காட்சியளிக்கும்.

ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரம்மோற்சவத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற வில்லை.

அதேபோல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் மாடவீதிகளில் சாமி வலம் வரும் நிகழ்ச்சி வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரம்மோற்சவத்தில் நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com