திருச்செந்தூர் அருகே தொழிலாளி மனைவியிடம் நகை பறித்த பெண் - ஒரு மாதத்திற்கு பின் கைது

திருச்செந்தூர் அருகே தொழிலாளி மனைவியிடம் நகை பறித்த பெண் ஒரு மாதத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன், தொழிலாளி. இவரது மனைவி முத்து (வயது40). இவர் கடந்த மாதம் திருச்செந்தூர் செல்வதற்காக காயாமொழியில் இருந்து பஸ்சில் சென்றுள்ளார்.

அவர் தனது கைப்பையில் பர்ஸ் மற்றும் 15 பவுன் நகையை எடுத்து கொண்டு சென்றார். அப்போது பஸ்சில் டிக்கெட் எடுப்பதற்காக கைப்பையில் இருந்த பர்சை தேடியுள்ளார். ஆனால் பர்ஸ் மற்றும் நகையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்து திருச்செந்தூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்களம் அம்பேத்கார் காலனியை சேர்ந்த உன்னி குட்டன் மனைவி துர்கா (24) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் பெண்களிடம் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அது போலதான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பஸ்சில் பயணம் செய்த முத்துவிடம் கைப்பையில் இருந்த 15 பவுன் நகையை திருடி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து நகையை மீட்டனர். பின்னர் அவரை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com