

வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. வாணியம்பாடி தேச மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாசம் (வயது 50) என்பவர் மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்றார்.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பிரகாசத்தை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாணியம்பாடியில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் பிரகாசம் கடை நடத்தி வந்தார்.
கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 6 பேர், நிலத்தகராறில் கடையை காலி செய்யுமாறு எச்சரித்து பிரகாசத்தை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதுப்பற்றி, வாணியம்பாடி டவுன் போலீசில் அவர் புகார் அளித்தார்.
புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தன்னை தாக்கியவர்கள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தற்கொலை மிரட்டல் விடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு பிரகாசம் அழைத்துச் செல்லப்பட்டார்.
சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியுடன் கலெக்டர் ராமனை சந்தித்து மனு அளித்தனர். அதில், அதிக சத்தம் எழுப்பும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்பாடு குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கின் தீர்ப்பில், கடந்த 2014-ம் ஆண்டு கூம்பு வடிவ ஒலிபெருக்கி குழாய்களை கோவில் விழாக்கள் உள்பட எந்த வித நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் விதமாக மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, கோர்ட்டு உத்தரவுபடி மசூதிகளில் பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மாவட்ட செயலாளர் ஞானவேலு தலைமையில் அளித்த மனுவில்:- வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான 24 கடைகள் உள்ளன. அக்கடைகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள் மற்றும் பயணிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படுகிறது.
இந்த நிலையில் 24 மணி நேரமும் இயங்கி வந்த அந்த கடைகளை, திடீரென இரவு 11 மணிக்கு மேல் மூட வேண்டும் என்று போலீசார் மிரட்டுகின்றனர்.
இதனால் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை அடைத்துவிடுகிறோம். எங்கள் கடைகளுக்கு மாத வாடகை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை செலுத்தி வருகிறோம். இந்த பெருந்தொகை பஸ் நிலைய கடைகள் என்பதால் தான் செலுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 11 மாநக ராட்சிகளில் உள்ள பஸ் நிலைய கடைகள் 24 மணி நேரமும் திறக்கப்பட்டுள்ளன. எனவே, வேலூர் மாநகர பஸ் நிலையத்தில் உள்ள கடைகளையும் 24 மணி நேரமும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேணடும் என்று கூறியிருந்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வாணாபுரத்தை சேர்ந்த பிரசாத் (19) என்ற நர்சிங் மாணவர் வந்தார். அவர், திடீரென தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்து எலி மருந்தை குடிக்க முயற்சித்தார்.
போலீசார், மாணவனை தடுத்து எலி மருந்தை கைப்பற்றினர். விசாரணையில், வாணாபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். வங்கி கடன் வழங்கவில்லை. தகுதியுள்ள தனக்கு கடன் வழங்கப்படாத வருதத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
ஏற்கனவே, வங்கிக்கடன் வழங்கப்பாடததை கண்டித்து மாணவன் பிரசாத், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடிக்க போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வந்தவாசி தாலுகா சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (42) என்ற லாரி உரிமையாளர், ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் தொகை உரிய நேரத்தில் செலுத்தப்படாததால், லாரியை கடன் கொடுத்தவர் எடுத்துச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்து அய்யப்பன் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார், தற்கொலை மிரட்டல் விடுத்த நர்சிங் மாணவன், லாரி உரிமையாளரை போலீஸ் நிலையத்திற்கு குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது. #tamilnews