

பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி எம்.எல்.ஏ. கதிர்காமு. ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்த இவர் தற்போது டி.டி.வி. தினகரன் அணிக்கு தாவியுள்ளார். இவரது வீடு தேனி டி.வி.ஆர். ஹவுஸ் பகுதியில் உள்ளது. இந்த முகவரிக்கு ஒரு தபால் கடிதம் வந்தது.
வருகிற 12-ந் தேதி செயற்குழு கூடுகிறது. அதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உள்பட உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் படுகொலை செய்து விடுவோம். அதற்கு முன்னதாக 10-ந் தேதியே டி.டி.வி. தினகரனை தூக்கி விடுவோம். பெரியகுளம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்து விடும். எனவே எடப்பாடி-ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பின் விளைவுகள் ஏற்படும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் சென்னை கிரீன் வேஸ் சாலை பகுதியில் இருந்து முத்துக்குமார் என்பவர் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட கதிர்காமுவின் மகன் அசோக் இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.