

திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் கூட்டுச் சாலையில் ‘டாஸ்மாக்’ மதுக்கடை செயல்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாராயணபுரம், வரதாபுரம், மஞ்சாக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பூட்டி இருந்த மதுக்கடை ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் மதுபாட்டில்களை வெளியே தூக்கி வந்து உடைத்தனர். மேலும் மதுக் கடையையும் உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் உடைத்து சூறையாடினர்.
இதில் சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன. இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மதுக்கடை சூறையாடப்பட்டது தொடர்பாக 45 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருவாலங்காட்டை சேர்ந்த உதயகுமார், பாலமுருகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.