காட்டுத்தீ விபத்தில் காயமடைந்த ஜெயஸ்ரீ
காட்டுத்தீ விபத்தில் காயமடைந்த ஜெயஸ்ரீ

தீ விபத்தில் சிக்கி 70 சதவீத தீக்காயம் - சென்னை பெண்ணுக்கு கோவையில் தீவிர சிகிச்சை

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 70 சதவீத தீக்காயம் அடைந்துள்ள சென்னை பெண்ணுக்கு கோவையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Published on

கோவை:

தேனி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள புழுதிவாக்கம் கலைமகள் முதலாவது குறுக்குதெருவை சேர்ந்த ஜெயஸ்ரீ(வயது 32) ஒருவராவார். மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று மாலை கோவை கங்கா ஆஸ்பத்திரியின் ஏர் ஆம்புலன்சு (ஹெலிகாப்டர் ஆம்புலன்சு) மூலம் கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

பின்னர் ஆம்புலன்சு வேன் மூலம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயஸ்ரீக்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. முகம், இரண்டு கைகள், இரண்டு கால்களில் தீயின் பாதிப்பு அதிகம் உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் கங்கா ஆஸ்பத்திரியின் இயக்குனரும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ராஜ சபாபதி கூறியதாவது:-

ஜெயஸ்ரீக்கு முதல்கட்டமாக தீப்புண்களை ஆற வைக்க வேண்டியுள்ளது. தீக்காயத்தில் தோல் கருகி விட்டது. அதற்கு பதிலாக உடலில் தோல் ஒட்டவைக்க வேண்டும். எங்கள் ஆஸ்பத்திரியில் உள்ள தோல் வங்கியில் உள்ள தோல் மூலம் இதை செய்ய முடியும்.

முகத்தில் தீக்காயம் அதிகம் ஏற்பட்டுள்ளதால் வாய், மூக்கு வழியாக புகை நுரையீரலுக்குள் சென்றுள்ளது. இதில் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அதை அவசரமாக குணப்படுத்த வேண்டும். ஜெயஸ்ரீக்கு திரவ உணவு அதிகமாக கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் உடல் வெப்பத்தை தணிக்க முடியும். பலத்த தீக்காயம் அடைந்த தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயஸ்ரீயின் தாயார் செல்வராணி உடனிருந்து கவனித்து வருகிறார்.  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com