திருவண்ணாமலையில் இன்று குபேரர் வலம் வருவதாக பக்தர்கள் கிரிவலம்

குபேர பகவான் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்றும் தகவல் பரவி வருகிறது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்ற பக்தர்கள் கூட்டம்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்ற பக்தர்கள் கூட்டம்.
Published on

தேய்பிறை சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கத்திற்கு இன்று குபேரபட்டினத்தில் இருந்து குபேரர் வந்து மறைமுகமாக பூஜை செய்வார் என்பதும், அதன்பிறகு குபேரர் கிரிவலம் செல்வார் என்பதும், குபேரர் பூஜை செய்வதை கண்டால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம்.

இதையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கத்திற்கு இன்று காலை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. குபேர லிங்கத்தை வணங்குவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

குபேர லிங்கத்தில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்களால் காஞ்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், குபேர பகவான் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்றும் தகவல் பரவியது. இதையறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.

குபேர கிரிவலத்தை முன்னிட்டு கிரிவலப் பாதையில் உள்ள வீடுகள் முன்பு பெண்கள் அரிசி மாவால் கோலம் போட்டு, வெற்றிலை வைத்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

வெளியூர் பக்தர்கள் பலரும் இன்று கோவிலுக்கு வந்து அருணாசலேஸ்வரரையும், குபேர லிங்கத்தையும் தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com