

பாகூர்:
தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்ற ராஜன் (வயது48), விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள ஸ்வீட் கடைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்து போது மோட்டார் சைக்கிளை காணாமல் ஜீவா திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜீவா தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று இரவு கொருக்குமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தவளக்குப்பம்- நல்லவாடு சாலையை சேர்ந்த ஆனந்தன் என்ற முருகானந்தன் (20)என்பதும் இவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போன ஜீவாவுக்கு சொந்தமானது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் அருள் என்பவரும் சேர்ந்து கிருமாம்பாக்கம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும், முதலியார்பேட்டை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களும், பெரியக்கடை பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்தை கைது செய்து அவரிடமிருந்து 5 திருட்டு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குபதிவு செய்து ஆனந்தனின் கூட்டாளி அருளை தேடிவருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட ஆனந்தன் மீது ஏற்கனவே திட்டக்குடி பகுதியில் வழிப்பறி வழக்கும், தவளக்குப்பம் பகுதியில் அடி-தடி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.