எங்கள் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும்: டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

2 நாட்களில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலத்தை 40-ஆக அதிகரிப்போம் என்றும், விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
எங்கள் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும்: டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
Published on

சென்னை:

சென்னை பெசன்ட்நகர் இல்லத்தில் டி.டி.வி.தினகரனை சந்தித்துவிட்டு, வெளியே வந்த அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பா.ஜ.க.வின் ஆதிக்கம் தமிழக அரசின் மீது இருக்கிறது என்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய எம்.எல்.ஏ.க்கள் கூறியிருக்கிறார்களே, உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- என்னுடைய நிலைப்பாடும் அதுதான்.

கேள்வி:- டி.டி.வி.தினகரன் தினந்தோறும் யாரையாவது நீக்கி அறிவிப்பு வெளியிடுகிறாரே, அது நடைமுறையில் இருக்கிறதா? எந்த நிலையில் அந்த அறிவிப்புகள் இருக்கின்றன?

பதில்:- கட்சியை வழிநடத்தும் துணை பொதுச்செயலாளர் விடுக்கும் ஆணைகளை ஏற்று, பொறுப்பாளர்கள் வேலை செய்கிறோம். ஒரு வருட காலத்தில் எங்கேயாவது பொதுக்கூட்டம் போட்டிருக்கிறார்களா? மேலூரில் நாங்கள் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் போட்டோம். லட்சக்கணக்கான பேர் அங்கு திரண்டு வந்தார்கள். அந்த தாக்கம் தான் கட்சி. அதைத்தான் வளர்க்கவேண்டும். அப்படி இல்லை என்றால் விட்டுவிடவேண்டியதுதானே. அந்த தாக்கம் வளர்ந்தால் கட்சிக்கு நல்லதுதானே. ஏன் அதை தொந்தரவு செய்கிறார்கள்.

வருகிற 12-ந்தேதி பொதுக்குழு கூட்டுவதாக கூறியிருக்கிறார்கள். அதற்கும் எங்களுடைய கட்சியில் ஒரு விதி இருக்கிறது. அந்த விதிமுறைப்படி கூட்டி, தீர்மானம் எடுத்தால் அது செல்லும்.

கேள்வி:- அ.தி.மு.க.வில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான விதி என்ன?

பதில்:- 3 ஆயிரம் பேர் பொதுக்குழு உறுப்பினர்கள். அதில், முதலில் 750 பேர் கையெழுத்து போடவேண்டும். அதன் பின்னர் என்ன காரணங்களுக்காக பொதுக்குழுவை கூட்டுகிறோம் என்று பொதுச்செயலாளரிடம் தெரிவிக்கவேண்டும். பொதுச்செயலாளர் அந்த காரணங்களை படித்து பார்த்துவிட்டு, கையெழுத்து போடவேண்டும். இது நடக்கின்ற காரியமா? யார் எழுதுவார்கள்? எப்படி தீர்மானம் போட்டு கையெழுத்து வாங்குவார்கள்? பொதுச்செயலாளர் சம்மதத்தின் பேரில் பொதுக்குழுவை கூட்டினால் அந்த தீர்மானம் செல்லுபடியாகும். இல்லை என்றால் இதுவும் கண் துடைப்பு வேலை தான்.

கேள்வி:- போட்டி பொதுக்குழு கூட்டுவதற்கு திட்டம் உள்ளதா?

பதில்:- போட்டி பொதுக்குழுவை கூட்டுவதற்கு எங்களுக்கு அவசியம் இல்லை. எங்கள் சார்பில் கூட்டினால் அ.தி.மு.க. பொதுக்குழு தான் கூடும். மிக விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

கேள்வி:- சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் சட்டப்படி செல்லாது. எங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை சட்டப்படி பறிக்க முடியாது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விரைவில் மாற்றப்படுவார். அவரை மாற்றினால் மட்டுமே இந்த அரசு தொடரும். இதுதொடர்பாக விரைவில் ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம்.

கேள்வி:- டி.டி.வி.தினகரன் ஆதரவு அணியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்?

பதில்:- எங்களுக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தந்துள்ளனர். இதுதவிர ‘ஸ்லீப்பர் செல்லில்’ 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மொத்தம் எங்களுக்கு ஆதரவாக 35 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இன்னும் 2 நாட்களில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை 40 ஆக அதிகரிப்போம். 40 எம்.எல்.ஏ.க்களை மொத்தமாக கூடிய விரைவில் நாங்கள் காண்பிப்போம்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com