அமைச்சர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம் - தங்கதமிழ்செல்வன்

தினகரன் அணிக்கு அமைச்சர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangatamilSelvan
அமைச்சர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம் - தங்கதமிழ்செல்வன்
Published on

தேனி:

தேனி அருகே பழனி செட்டிபட்டியில் டி.டி.வி. தினகரன் அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மாநில கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் துரோகம் புரிந்தவர்கள். அவர்கள் செய்த துரோகத்துக்கு என்ன தண்டனை என்பதை மிக விரைவில் நாங்கள் தெரிவிப்போம். குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி கிடையாது. அவருடைய மருமகன் சென்னையில் அரசு வக்கீலாக உள்ளார். மகனை பின்னாலேயே வைத்துக் கொள்கிறார்.

அரசு விழாக்களில் அவருடைய மகனுக்கு என்ன வேலை? கட்சிக்காரர்கள் இதை கேட்க வேண்டாமா? சசிகலாவால் தான் ஓ.பன்னீர்செல்வம் குடும்பம் முன்னேறியது.

தேனி மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினரால் மணல் கொள்ளை நடக்கிறது. பொட்டிப்புரம் ஊராட்சியில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இந்த மணல் திருட்டை தடுக்காவிட்டால், அந்த தொகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கிறோம்.அமைச்சர்கள் மனம் திருந்தி வந்தால் தொண்டர்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 6 அமைச்சர்களை நீக்கினால் ஜெயலலிதா வழியிலான ஆட்சியை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று நீங்கள் கூறியதற்கு, ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல் உள்ளது என்றும், உடன் இருப்பவர்களை திருப்திப்படுத்தவே தங்கதமிழ் செல்வன் கூறுகிறார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

பதில்:- நாங்கள் எப்போதும் நடப்பதை மட்டுமே பேசுவோம். இதையும் கூறியிருக் கிறோம். நடக்கிறதா? இல்லையா? என்பதை எங்களின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் பாருங்கள். அதற்கு பின்னராவது அவர்களுக்கு புரிந்தால் சரி. தற்போது வரையில் அவர்கள் அதிகார போதையில் இருக்கிறார்கள். தீர்ப்பு வந்தவுடன் இந்த 6 பேரும் புரிந்து கொண்டு திரும்பி வருவார்கள்.

கேள்வி:- அவ்வாறு அமைச்சர்கள் உங்கள் அணிக்கு வந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- ஒருவேளை மனம் திருந்தி வந்தால் எங்களின் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் மற்றும் தொண்டர்கள் விருப்பப்படி அவர்களை ஏற்றுக்கொள்வோம்.

கேள்வி:- உங்களின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் தவிர மற்ற அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது பதிலளிக்க மறுத்து விட்டனரே?

பதில்:- மற்ற அமைச்சர்கள் எல்லாம் தற்போது சந்தோ‌ஷப்படுகின்றனர். ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. இவர்களுக்கும் அதுதான் நடக்க போகிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் கூறினார். #ThangatamilSelvan #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com