தாண்டிக்குடி பகுதியில் மழையால் அடித்து செல்லப்பட்ட சாலைகள்
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கே.சி.பட்டி, குப்பம்மாள் பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது.
மேலும் இப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் அரித்துச் செல்லப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக தாண்டிக்குடியில் இருந்து மங்களம் கொம்பு செல்லும் சாலையில் தலக்காடு பகுதியில் ரோடு சேதமடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
தாண்டிக்குடி அருகே பட்டளங்காடு பிரிவு பகுதியில் இருந்து செல்லும் சாலை ஓரங்களில் செடி-கொடிகள் படர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அவை மறைக்கின்றன.
எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

