எல்லைபிள்ளைசாவடியில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் கொள்ளை

எல்லைபிள்ளைசாவடியில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
எல்லைபிள்ளைசாவடியில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் கொள்ளை
Published on

புதுச்சேரி:

புதுவை 100 அடி ரோடு எல்லைபிள்ளை சாவடியில் சிருங்கேரி சிவகங்கா மடம் அருகே சாராதம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுப்புற பகுதிமக்களும், எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்களும் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் அர்ச்சகர் ஜெயக்குமார் (வயது60) சாமிக்கு பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் ஜெயக்குமார் சாமிக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது கோவிலில் உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த காணிக்கை பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. உண்டியலில் காணிக்கை பணம் சுமார் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவில் அர்ச்சகர் ஜெயக்குமார் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் துப்பு துலக்கிய போது நள்ளிரவு 12.30 மணியளவில் கோவிலில் ஒரு வாலிபர் புகுந்து உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட கோவில் பகுதி எப்போதுமே பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். மேலும் எதிரே பிரசவ ஆஸ்பத்திரி உள்ளதால் பொதுமக்கள் எந்நேரமும் வந்து செல்வார்கள். அவ்வாறு இருக்க வாலிபர் துணிகரமாக உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com