குன்னூர் ஏல மையத்தில் ரூ.10 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை

குன்னூர் ஏல மையத்தில் ரூ.10 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது. #Teapowder
குன்னூர் ஏல மையத்தில் ரூ.10 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
Published on

குன்னூர்:

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடக்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். குன்னூர் மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 21, 22-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு 11 லட்சத்து 16 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 6 லட்சத்து 40 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 76 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 10 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.9 கோடியே 93 லட்சம் ஆகும். இது 90 சதவீத விற்பனை ஆகும்.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.241, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.256 என ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.90 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.125 முதல் ரூ.140 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.82 முதல் ரூ.89 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.138 வரையும் ஏலம் போனது. அடுத்த ஏலம் வருகிற 28, 1-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 9 லட்சத்து 86 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.  #Teapowder

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com