

முத்துப்பேட்டை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் டாஸ்மாக்கும் மூடப்பட்டது. இதனால் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு மர்ம நபர்கள் விற்பனை செய்து வந்தனர். மேலும் மதுபாட்டில் கிடைக்காததால் பல இடங்களில் கள்ளச்சாரயம் காய்ச்ச தொடங்கிவிட்டனர். இதனால் 40 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந் தேதி டாஸ்மாக்கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக்கடைகள் திறக்கப் பட்டன. மதுபாட்டில்களை வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது.
ஆனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் சிலர் உதவியுடன் பல இடங்களில் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் பதுக்கிவிட்டனர். அதனை போலீசார் கண்டுபிடித்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆலங்காடு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவால் நேற்று முன்தினம் மூடப்பட்டது. டாஸ்மாக்கடை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மூடப்பட்டுள்ள டாஸ்மாக்கடையை ஒட்டியுள்ள மரப்பட்டறை பின்புறம் டாஸ்மாக்கடைக்கு பாதை இருந்துள்ளது. இந்நிலையில் அந்த பாதை வழியாக டாஸ்மாக்கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை கொள்ளையடிக்கப்படுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரப்பட்டறையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது டாஸ்டாக்கடைக்குள் இருந்து மதுபாட்டில்கள் அடங்கிய 20 பெட்டிகளை கொள்ளையடித்து மரப்பட்டறையில் பதுக்கிவைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த 20 பெட்டிகளில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 960 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அந்த மரப்பட்டறை உரிமையாளர் பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயமான டாஸ்மாக் சூப்பர்வைசரை வலைவீசி தேடி வருகின்றனர்.