

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் கலெக்டர் அரவிந்த் மனுக்கள் வாங்கினார். அப்போது 25 மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். இந்த முகாமில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று அவர்களுடைய குறைகள், கோரிக்கைகளை தீர்த்து வைப்பார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததாலும், தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆன்லைன் மூலமாக மக்கள் மனுக்களை கலெக்டருக்கு அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாலும், தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளதாலும் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது ரேஷன் கார்டு, வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம், தொழில் கடன், கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 193 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். பின்னர் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரங்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்கள் முண்டியடிக்காமல் இருக்கவும், அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு மனு கொடுப்பதற்கான ஒப்புகைச்சீட்டு கையால் எழுதி வழங்கப்பட்டது. கலெக்டரிடம் ஒவ்வொருவராகச் சென்று மனு கொடுத்தனர். உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கை கழுவ சோப்பு மற்றும் தண்ணீர் வசதி, கைகளை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவையும் வைக்கப்பட்டு இருந்தது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றதையடுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.