எனது உயிருக்கு ஆபத்து... நடிகர் சரவணன் மீது மனைவி போலீசில் புகார்

சூர்ய ஸ்ரீ தங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமரா அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, மவுலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் சூர்யஸ்ரீ புகார் அளித்தார்.
எனது உயிருக்கு ஆபத்து... நடிகர் சரவணன் மீது மனைவி போலீசில் புகார்
Published on

பிரபல சினிமா நடிகர் சரவணன். இவர் பருத்தி வீரன், வைதேகி வந்தாச்சு, பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை சரவணன் 2-வது திருமணம் செய்து கொண்டார். மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முதல் மனைவி தனியாகவும், 2-வது மனைவியுடன் சரவணனும் வசித்து வந்தனர்.

முதல் மனைவி சூர்ய ஸ்ரீயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், எதிர்எதிர் வீட்டில் வசித்து வந்த போதும் பேசிக் கொள்ளவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கணவர் சரவணன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டுவதாகக் கூறி சமீபத்தில் ஆவடி காவல் ஆணையரகத்தில் சூரியஸ்ரீ புகார் அளித்து இருந்தார். இதேபோல் தனக்கு உணவு கூடதருவதில்லை என்றும் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் வழக்கும் தொடர்ந்திருந்தார். இதன் அடிப்படையில், மனைவி சூர்யஸ்ரீக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 2-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் சூர்ய ஸ்ரீ தங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமரா அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, மவுலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் சூர்யஸ்ரீ புகார் அளித்தார். அதில், ஏற்கனவே பல்வேறு தாக்குதல்கள் தன் மீது நடந்துள்ள நிலையில், தற்போது கண்காணிப்பு கேமராவும் அகற்றப்பட்டு இருப்பது, தனக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், எனவே தனக்கும், தனது உடமைக்கும் எது நேர்ந்தாலும் அதற்கு நடிகர் சரவணன் தான் முழு காரணம். முதல் மனைவியிடம் சட்டப்படி முறையாக விவாகரத்து பெறாமல், என்னை தனியாக தவிக்க விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்தது குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com