

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மேலும் அவர் அ.தி.மு.க.வில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுவதாகவும் அறிவித்தார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கரிடம் த.வெ.க.வில் இணையப் போகிறீர்களா என்று கேட்டதற்கு அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் அந்த கட்சியில் இருந்து வருகிறது. எனது தந்தை 1986 சேர்மனாக இருந்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பணியாற்றினார். 2-வது தலைமுறையாக நானும் அ.தி.மு.க.வில் இருந்து வந்தேன்.
26 வயதில் எம்.எல்.ஏ. வாக மக்களால் தேர்ந்தெருக்கப்பட்டேன். 5 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன். அமைச்சராக இருந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன்.
புதுக்கோட்டையை அ.தி.மு.க. முகமாக மாற்றினேன். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகள் பா.ஜ.க.விற்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கினார்.
தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். தேர்தலுக்குப் பிறகும் த.வெ.க. கூட்டணியை வலியுறுத்தினேன். ஆனால் அவர் தி.மு.க. வுடன் போக விரும்பினார்.
அது எனக்கு வருத்தமளித்தது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் அ.தி.மு.க. தலைமைக்கும் எனக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஒரு தனி நபரின் தவறான போக்கு இந்த முடிவுக்கு ஆளாக்கி உள்ளது.
என்னை உருவாக்கிய அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறுவது பெரும் வலியை தருகிறது. கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. அதை நானும் உணர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், வருகிற 22-ந் தேதிக்குள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் ஆதரவாளர்கள் சிலருடன் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் புதுக்கோட்டையில் மாபெரும் இணைப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.