தூத்துக்குடியில் பயங்கரம்: போலீசாரை அரிவாளால் வெட்டிய கும்பல் - 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகளுக்குச் சிகிச்சை!
Crime
Published on

தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலாளியின் வீட்டை குறிவைத்து நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீ பற்றவைத்து வீசிவிட்டு தப்பினர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்துத் தகவல் அறிந்து இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்ற வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், காவலர் மீனாட்சி ஆகியோர் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்களைப் பிடித்து விசாரணை நடத்த முயன்றனர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க நினைத்த அந்த ஆயுதக் கும்பல், திடீரெனத் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் காவலர் மீனாட்சியைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.

போலீசாரைக் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய கும்பலை, காயமடைந்த நிலையிலும் காவல்துறையினர் விடாமல் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட கார்த்திக், தினேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் சம்பவ இடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், இவர்களுடன் தொடர்புடைய விக்னேஷ் என்பவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற போது நடந்த தள்ளுமுள்ளுவில், குற்றவாளிகளான கார்த்திக் மற்றும் தினேஷிற்கு காலில் காயமும், 17 வயது சிறுவனுக்கு கையில் பலத்த எலும்பு முறிவும் ஏற்பட்டது.

காயமடைந்த குற்றவாளிகள் மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த காவல் அதிகாரிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் யார்? மண்ணெண்ணெய் குண்டு வீச்சிற்கு என்ன காரணம்? உள்ளிட்டவை குறித்து தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com