தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆதவ் அர்ஜூனா பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கவர்னரை முழுவதுமாக அவையில் நேற்று அமர வைத்தது தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு.
TN Assembly - Aadhav arjuna
Published on

சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில்," திமுக சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்,

இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று குறிப்பிட்டதற்கு காரணமாக இருந்தது தி.மு.க அரசு தான்.

தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். ஆனால் நேற்று நடைபெற்ற கவர்னர் உரையில் இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக பேசினார்.

அப்போது அவை முன்னவர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டது என்று கூறுகிறார். அதில் எந்த தவறும் இல்லை. அது வரவேற்கத்தக்கது என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், அண்ணா உருவாக்கிய மாநிலக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவோம். இடைக்காலத்தில் தான் வந்தே மாதரம் பிரச்சனை வந்துள்ளது. பதவியேற்பு விழாவுக்கு முன்பே தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அரசு நிகழ்ச்சிகளிலும் பாட வேண்டும் என்றோம். எங்களின் கருத்துகளை கவர்னரிடம் உறுதியாக இருந்தோம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டசபையில் கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்த நிலையில் நேற்று தமிழ்நாடு கவர்னர் முழு உரையை வாசித்தார். மாநிலக் கொள்கையில் எப்போது உறுதியாக இருப்போம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கவர்னரை முழுவதுமாக அவையில் நேற்று அமர வைத்தது தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு என்றார்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் :-

தேசிய கீதம் ஒரு முறையா இரு முறையா என்பதை தீர்மானிக்க வேண்டியது நான் தான். அதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம். நடப்பது எல்லாம் நல்லதாகவே நடந்துள்ளது. இனியும் நல்லதே நடக்கும் என்றார்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:

எ.வ.வேலு (தி.மு.க) :-

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடியதை வரவேற்கிறோம்.

ஆனால் இறுதியாக பாட வேண்டிய நாட்டுப்பண் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு ஏன் பாடப்பட்டது. இருமுறையாக மாற்றி விட்டீர்கள். இனி, 3 முறை, 4 முறையாக மாற்ற சொல்வார்கள்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது

X

Maalai Malar
www.maalaimalar.com