

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா, கெத்தை, பரளி, பில்லூர், சிங்காரா, மாயாறு உள்ளிட்ட 12 நீர்மின் நிலையங்களும், 13 முக்கிய அணைகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஓட்டு மொத்தமாக 833.65 மெகாவாட் மின்சாரதை உற்பத்தி செய்ய இயலும்.
நீலகிரி அணைகளில் நடப்பாண்டு ஜனவரி மாத நிலவரப்படி சுமார் 70 சதவீதம் தண்ணீர் இருப்பு இருந்தது. பின்னர் குடிநீர் திட்டங்கள் மற்றும் மின்உற்பத்திக்காக தொடர்ந்து அணை நீர் பயன்படுத்தப்பட்டு வந்ததால் பிப்ரவரி மாதத்தில் நீர் இருப்பு 51 சதவீதமாக குறைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சராசரியாக10 செ.மீ. மட்டுமே கோடை மழை பதிவானதால் அணைகளுக்கு நீர்வரத்து பெரிதாக இல்லை. இதன்காரணமாக ஜூன் மாதம் 2-வது வார நிலவரப்படி அணைகளின் மொத்த நீர் இருப்பு சுமார் 30 சதவீதமாக மட்டுமே உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், தொடர்ந்து புனல் மின்உற்பத்தியை மேற்கொள்வதில் மின்சாரவாரியம் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கிடையே நீலகிரியின் முக்கிய தொழிலாக விளங்கும் காய்கறி விவசாயமும் பருவமழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கும் 3-வது போக விவசாய பணிகள் ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் அறுவடையை எட்டும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை குறைவால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் அவலாஞ்சி, அப்பர் பவானி உள்ளிட்ட முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வறட்சி நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் விவரம்:-
முக்குருத்தி–18 அடியில் 12 அடி, பைக்காரா–100 அடியில் 65 அடி, சாண்டிநல்லா –49 அடியில் 22 அடி, எமரால்டு– 184 அடியில் 50 அடி, அவலாஞ்சி–171 அடியில் 45 அடி, அப்பர் பவானி–210 அடியில் 120 அடி, போர்த்திமந்து– 130 அடியில் 40 அடி, பார்சன்ஸ்வேலி– 75 அடியில் 45 அடி, மாயாறு –17 அடியில் 12 அடி, குந்தா–89 அடியில் 84 அடி, கெத்தை–156 அடியில் 130 அடி, பில்லூர் –100 அடியில் 60 அடி என்பது தெரிய வந்து உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடைக்காலத்தில் அனைத்து அணைகளையும் முறையாக தூர்வாரி, நீர் சேமிப்பு திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசு மற்றும் மின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாவட்ட நீர்வளங்களை முழுமையாக பாதுகாத்து, எதிர்கால குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அணைகளின் பராமரிப்பு பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடைமழை மற்றும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததாலும், அணைகள் முறையாக தூர்வாரப்படாததாலும் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் நீர்மின் உற்பத்தி, விவசாய பணிகள் பாதிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.