

இந்த குரங்கு தொல்லை தாங்க முடியலையே...
இதுதான் கடந்த சில நாட்களாக பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளிடையே பேச்சாக உள்ளது. பரங்கிமலையில் மின்சார ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைந்து இருப்பதால் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ரெயில் நிலையத்தில் எல்லா வசதிகள் இருந்தும் இப்போது புதிதாக முளைத்து இருப்பது குரங்கு தொல்லை. இந்த ரெயில் நிலையத்தில் இதுவரை குரங்குகள் நடமாட்டம் இருந்ததில்லை.
ஆனால் எங்கிருந்தோ வந்த சில குரங்குகள் இப்போது ரெயில் நிலையத்தில் சுற்றுகிறது. சும்மா சுற்றினாலும் பரவாயில்லை. பயணிகள் கைகளில் கொண்டு செல்லும் பழங்கள், நொறுக்கு தீனிகளை திடீரென்று பாய்ந்து பிடுங்கி சென்று விடுகின்றன.
மின்சார ரெயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு ஒரு பெண் பயணி நடைமேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். அவரது கையில் ஒரு பையில் ஒரு சீப்பு செவ்வாழை பழம் இருந்தது. அதை கவனித்த அந்த சேட்டைக்கார குரங்கு அதை பிடுங்கியது. பழ பை கனமாக இருந்ததால் அதை தூக்கி செல்ல முடியாமல் தரையில் அமர்ந்தபடியே உரித்து தின்றது.
பழத்தை பறிகொடுத்த அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக சில பயணிகள் அந்த குரங்கை விரட்ட முயற்சித்தனர். ஆனால் குரங்கு ஆவேசமாக பாய்ந்ததும் அந்த பயணிகள் தெறித்து ஓடினார்கள். கடைசியில் ஒரு சில பழங்களை மட்டும் தின்று விட்டு மற்ற பழங்களை கடித்து குதறி போட்டன.
இப்படி தினமும் ஒன்றிரண்டு பயணிகள் அந்த சேட்டைக்கார குரங்குகளிடம் சிக்கி கொள்கிறார்கள். இந்த தகவல் வனத்துறைக்கும் சென்றது.
இதையடுத்து அந்த குரங்குகளை பிடிப்பதற்காக நேற்று மாலையில் கூண்டுடன் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். குரங்குக்கு விருப்பமான வாழைப்பழங்களை கூண்டில் வைத்தார்கள். பொதுவாக அந்த பகுதியில் குரங்குகள் வருவதில்லை என்றும் சிலர் உணவு பொருட்களை போடுவதால்தான் வந்திருக்கும். உணவுகள் கிடைக்காததால் பயணிகளிடம் பிடுங்கி இருக்கும் என்று வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
எப்படியாவது அந்த குரங்குகளை பிடித்து விடலாம் என்று நம்பிக்கையோடு கூண்டை குரங்குகள் நடமாடிய பகுதியில் கொண்டு வைத்து விட்டு காத்திருந்தனர்.
ஆனால் அந்த சேட்டைக்கார குரங்கோ கஞ்சா கருப்பு பாணியில் ‘சிறுத்தை சிக்கும்லே... நான் சிக்குவேனா...?’ என்பது போல் கூண்டு அருகில் வரை சென்று அதற்குள் இருந்த பழங்களையும் பார்த்தது. இதில் கை வைத்தால் சிக்கி கொள்வோம் என்று நினைத்து அடுத்த கணமே அங்கிருந்து தாவி குவித்து ஓடியது.
அதை பார்த்ததும் சிக்காமலா போய் விடுவாய்? பார்த்து கொள்கிறோம் என்றபடி வனத்துறையினரும் அங்கிருந்து நகர்ந்தனர்.