பாராளுமன்றத்தில் 2-வது நாளாக பதவி ஏற்பு: தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்றனர்

பாராளுமன்ற மக்களவையில் இன்று 2-வது நாளாக எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றனர்.
பாராளுமன்றத்தில் 2-வது நாளாக பதவி ஏற்பு: தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்றனர்
Published on

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பதவியேற்றார். அவரது தலைமையிலான மந்திரி சபை கடந்த 30-ந்தேதி பதவியேற்றது.

தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக 17-வது பாராளுமன்றம் நேற்று கூடியது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. வீரேந்திர குமார் இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றார். அவர் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்காரி, ஸ்மிருதிஇரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட 313 எம்.பி.க்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

இன்று 2-வது நாளாக புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதி பா.ஜனதா எம்.பி. சந்தோஷ் பாண்டே முதல் நபராக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து சிவசேனா உறுப்பினர் கிருபாள் பாலாஜி மராட்டிய மொழியில் பதவியேற்றார். முதல் முறை எம்.பி.யான சன்னிதியோல் ஆங்கிலத்தில் பதவியேற்றார்.

அதை தொடர்ந்து புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவியேற்றார்.

பின்னர் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவி ஏற்ற பிறகு அவர்கள் அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

இன்றுடன் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிவடைகிறது. புதிய சபாநாயகர் தேர்வு நாளை நடக்கிறது. 20-ந்தேதி பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் 5-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com