

சென்னை:
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோருடன் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சுவாமிகள் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது விஜயேந்திரர் மட்டும் கண்ணை மூடியபடியே தியானத்தில் அமர்ந்து இருந்தார். அதே விழாவில் தேசிய கீதம் பாடும் போது அவர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயேந்திரரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டியில் இன்று கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடிய போது விஜயேந்திரர் எழுந்திருக்காதது தவறு தான். அப்போது அவர் தியானத்தில் இருந்ததாக கூறுகிறார்கள். எந்த நிலையில் இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவர் எழுந்திருக்க வேண்டும். ஏன் எழுந்திருக்கவில்லை என அவர் தான் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கடம்பூர் ராஜூ அளித்த இன்னொரு பேட்டியில் விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் விஜயேந்திரருக்கு 2 அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மா.பாண்டியராஜன் ஆகியோர் அவரது நடவடிக்கையில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மா.பாண்டியராஜன் கூறும்போது, விஜயேந்திரர் தியானத்தில் அமர்ந்திருந்ததாக கூறுகிறார்கள். அதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, விஜயேந்திரர் நல்ல பண்புகளை கொண்டவர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவர் எழுந்திருக்காதது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
விஜயேந்திரரின் செயலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர், கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சங்கரமடம் தமிழ்த்தாய் பாடல் இசைக்கும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று தெரிவித்துள்ளது. இதுவும் சர்ச்சையாகி உள்ளது. #tamilnews