குளியல் அறையில் வாலிபர் பிணம்- போலீஸ் விசாரணை

தாமரைகுளம் அருகே குளியல் அறையில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மதன்
பொன்மதன்
Published on

தென்தாமரைகுளம்:

வடக்கு தாமரைகுளம் அருகே உள்ள ஈத்தங்காட்டில் ஒரு மிட்டாய் கடை உள்ளது. இந்த மிட்டாய் கடையில் கோவில்பட்டி ரெட்டியார் பட்டியைச் சேர்ந்த குமார் மகன் பொன்மதன் (வயது 24) என்பவர் அங்கேயே தங்கி கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு கடையில் வேலையை முடித்துவிட்டு பொன்மதன் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. சக தொழிலாளர்கள் கதவை தட்டியும் எந்த சத்தமும் வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த தொழிலாளர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, உள்ளே மயங்கிய நிலையில் பொன்மதன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பொன்மதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இதுபற்றி பொன்மதன் தந்தை குமார் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com