வேனில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது- 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

குளித்தலை அருகே இளம்பெண்ணை வேனில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குளித்தலை:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் பானுமதி (வயது 22). இவர் குளித்தலையில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று பானுமதி தனது வீட்டில் இருந்து மொபட்டில் வேலைக்காக குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது குளித்தலை-மணப்பாறை சாலையில், குளித்தலை கோட்டமேடு அருகே ஒரு திருமண மண்டபம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த சாலையில் நின்று கொண்டிருந்த 4 பேர் பானுமதியை வழிமறித்துள்ளனர். பின்னர் அவரை ஆம்னி வேனில் கடத்தி கொண்டு, நங்கவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நங்கவரம் அருகே அந்த பெண்ணை வேனில் இருந்து இறக்கி அப்பெண்ணிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நங்கவரம் பகுதி போலீசார் ரோந்து வந்தனர். இதைப்பார்த்த 4 பேரும் பானுமதியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து பானுமதியை தன்னை 4 பேர் காரில் கடத்தி சென்றது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பானுமதி தனது பெற்றோருடன் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், பானுமதியை ஆம்னி வேனில் கடத்தி சென்றது கோட்டமேடு பகுதியை சேர்ந்த ராசு (24), அவரது தம்பி ராஜலிங்கம், குளித்தலை அருகே உள்ள வாளாந்தூரை சேர்ந்த செந்தில்குமார் மகன்கள் அரவிந்த், அருண் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராசுவை மட்டும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இளம்பெண் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com