

கோவை:
சிவகங்கையை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அந்த இளம்பெண் தனது குடும்பத்துடன் கோவை வந்தார். இங்கு காளப்பட்டி பகுதியில் தங்கி கணவருடன் கூலி வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த இளம்பெண் வீட்டின் முன்பு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (37) என்பவர் வந்தார். அவர் திடீரென அந்த இளம்பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டர். இதனால் சசிகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து அந்த இளம்பெண் தனது கணவரிடம் கூறினார். பின்னர் அந்த இளம்பெண் தனது கணவரை அழைத்துக்கொண்டு சசிகுமாரின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவரை தட்டிக்கேட்டார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் அந்த இளம்பெண் மற்றும் அவரது கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.