பொங்கல் பரிசு தொகையை தந்தையிடம் கேட்டதால் தகராறு- தம்பியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி

பொங்கல் பரிசு தொகையை தந்தையிடம் கேட்டதால் நடந்த தகராறில் தம்பியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

மதுக்கூர்:

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(வயது 78). இவருக்கு பாலசுப்பிரமணியன்(50), விஸ்வலிங்கம்(45) ஆகிய 2 மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் விவசாய கூலி தொழிலாளர்கள்.

குடும்ப தலைவரான ராமன், தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு ரூ.2,500-ஐ நேற்று ரேஷன் கடையில் வாங்கினார். இந்த நிலையில் மாலை 6 மணியளவில் விஸ்வலிங்கம் மது குடித்து விட்டு வந்து தனது தந்தை ராமனிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு தகராறு செய்தார்.

அப்போது ராமன், ‘நீ தான் வேலைக்கு செல்கிறாயே, அதனால் பணம் தர முடியாது’ என விஸ்வலிங்கத்திடம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஸ்வலிங்கம், தனது தந்தை என்றும் பாராமல் அரிவாளால் ராமனை வெட்டினார். இதில் ராமனுக்கு கையில் வெட்டு விழுந்தது.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமனின் மூத்த மகன் பாலசுப்பிரமணியன், தந்தையை அரிவாளால் வெட்டியது குறித்து விஸ்வலிங்கத்திடம் கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து பாலசுப்பிரமணியன், விஸ்வலிங்கத்தை சரமாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்த விஸ்வலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து சிரமேல்குடி கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன், மதுக்கூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொங்கல் பரிசு தொகையை கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com