கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானி ஆற்றில் மூழ்கி இறந்த ரஞ்சித்குமார்.
பவானி ஆற்றில் மூழ்கி இறந்த ரஞ்சித்குமார்.
Published on

டி.என்.பாளையம்:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 20). சேவூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் ரஞ்சித்குமார் நேற்று மதியம் பச்சாம்பாளையத்தை சேர்ந்த 11 பேருடன் மோட்டார் சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையத்துக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் பேயணை மடுவு என்ற இடத்தில் செல்லும் பவானி ஆற்றில் அனைவரும் இறங்கி குளித்தனர்.

அப்போது நீச்சல் தெரியாத ரஞ்சித்குமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். அருகே குளித்த அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து உடனே கோபி தீயணைப்பு நிலையத்துக்கும், பங்களாபுதூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினார்கள். இந்த நிலையில் சுமார் 30 நிமிடத்துக்கு பிறகு ரஞ்சித்குமாரின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து பங்களாப்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளிக்க வந்த இடத்தில் நண்பரை இழந்ததை நினைத்து உடன் வந்தவர்கள் கதறினார்கள். கடந்த வாரம் இதே பகுதியில் துணி துவைக்க சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com