

வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள முத்தூர்- காங்கயம் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான நூல்மில் செயல்பட்டு வருகிறது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதுதவிர உள்ளூரை சேர்ந்த தொழிலாளிகளும் வேலை பார்க்கின்றனர். இவர்கள் அனைவரும் காலை, இரவு என 2 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 9-ந் தேதி காலை இந்த மில்லில் உள்ள ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மிக்ஸிங் டிபார்ட்மெண்ட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது. ஆனால் அதனை பாராமல் ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்போது அங்கு 4 வடமாநில வாலிபர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
ஆனால் அதற்குள் தீ அந்த அறை முழுவதும் பரவியதால் வாலிபர்கள் 4 பேரும் தீயில் சிக்கி கொண்டனர். அவர்கள் மீதும் தீ பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாத 4 பேரும் சத்தம் எழுப்பினர். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
மேலும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிய ஓடிசாவை சேர்ந்த ராஜூகிஷோர் மாங்குராஜ்(24), ரஞ்சித்(19), ஜான்மேஜாய் கங்காய்(22), பீகாரை சேரந்த ராஜேஷ்குமார்ஷா(24) ஆகியோரை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நேற்று ராஜூகிஷோர் மாங்குராஜ், ஜான்மேஜாய் கங்காய் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 2 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.