

சின்னாளபட்டி:
மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் தினசரி காலை 8.00 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து கிளம்பிச்செல்கிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வருவதற்கு கொடைரோடு அடுத்துள்ள முருகன்பட்டி வழித்தடத்தில் 3 கி.மீ தொலைவில் உள்ள குகை பாதை வழியாக வருகிறது.
இன்று காலை கொடைரோடு ரெயில் நிலையத்தை கடந்து வைகை எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முருகன்பட்டி தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரெயில்வே ஊழியர்களுக்கு என்ஜின் டிரைவர் தகவல் கொடுத்தார். திண்டுக்கல்லில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 300 கிலோ எடை கொண்ட அந்த ராட்சத பாறையை உடைத்தும், சிதைத்தும் தண்டவாளத்தை விட்டு அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகு 45 நிமிடம் தாமதமாக வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் பாறை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் தெரிவிக்கையில், திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செல்லும் ரெயில்கள் அம்பாத்துரையில் இருந்து நேரடியாக கொடைரோடு சென்று பின்னர் மதுரைக்கு சென்றுவிடும்.
ஆனால் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வரும் ரெயில்கள் முருகன்பட்டியில் அமைந்துள்ள குகை பாதை வழியாக செல்கிறது. இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்ததால் ராட்சத பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது. என்ஜின் டிரைவரின் கவனிப்பால் அந்த பாறை அகற்றப்பட்டது என்று தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் 8.30 மணிக்கு ரெயில் கிளம்பிச்சென்றதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.