தேர்தலை பயன்படுத்தி தமிழகம், கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல்- மேலும் 2 பேர் கைது

கள்ள நோட்டு அச்சடித்து கோவை, கேரளாவில் புழக்கத்தில் விட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது
கைது
Published on

கோவை:

கேரள மாநிலம் கொச்சி உதயம் பேரூர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக அங்குள்ள வியாபாரிகள் உதயம் பேரூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களாக போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். இருப்பினும் அதனை புழக்கத்தில் விட்டவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதற்காக போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்தனர்.

அவர்கள் கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டவர்கள் யார்? இங்கு தான் கள்ள நோட்டு அச்சடிக்கப்படுகிறதா? அல்லது வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு புழக்கத்தில் விடப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் இந்த விசாரணையில் கோவையில் உள்ள கரும்புக்கடை பகுதியில் சிலர் கள்ள நோட்டுகளை அச்சடித்து, வீடுகளில் பதுக்கி வைத்து கோவை மற்றும் கேரளாவில் புழக்கத்தில் விடுவதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக கேரள தனிப்படை போலீசார் கோவை கரும்புக்கடை பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்குள்ள வள்ளல் நகர் பகுதியில் வசிக்கும் அஸ்ரப் அலி(வயது24) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கும் எதுவும் சிக்கவில்லை. அவரிடம் நடத்திய விசாரணையில், உக்கடம் அல்- அமீன் பகுதியை சேர்ந்த செய்யது சுல்தான்(32) என்பவர் தான் தன்னிடம் பணத்தை கொடுத்ததாகவும், அதனை தான் கேரளாவில் புழக்கத்தில் விட்டதையும் ஒப்புக் கொண்டார்.

தனிப்படை போலீசார் அஸ்ரப் அலியை அழைத்து கொண்டு செய்யது சுல்தான் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது அங்கு கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வீட்டில் உள்ள அறை முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் செய்யது சுல்தானையும் கைது செய்தனர்.

பின்னர் 2 பேரையும் இரவோடு, இரவாக கொச்சியில் உள்ள உதயம் பேரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் 2 பேரிடமும் விடிய, விடிய தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கைது செய்யப்பட்ட செய்யது சுல்தானுக்கு விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது. அதற்காக பலவாறு யோசித்துள்ளார். அப்போது தான் அவருக்கு கள்ளநோட்டு அச்சடிக்கும் எண்ணம் தோன்றியுள்ளது.

அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செய்யது சுல்தான் ஜெராக்ஸ் எந்திரம் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் அந்த எந்திரத்தில் ஒரிஜினல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து ஜெராக்ஸ் எடுத்து தொடர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார்.

பின்னர் கள்ள நோட்டுகளை செய்யது சுல்தான் கோவை மற்றும் கேரளாவில் புழக்கத்தில் விட சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். அந்த சமயத்தில் தான் கேரளா மற்றும் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த சமயம் தான் தனக்கு சரியான நேரம். போலீசார் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால் இந்த நேரத்தில் பணத்தை புழக்கத்தில் விட்டால் அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என நினைத்தார்.

உடனடியாக களத்தில் இறங்கிய செய்யது சுல்தான் தான் அச்சடித்த கள்ள நோட்டுகளை கோவையின் பல்வேறு பகுதிகளில் தனது நண்பர்கள் மூலம் புழக்கத்தில் விட்டார். இதேபோல் கேரளாவிலும், தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பணத்தை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ்(30), அசாருதீன்ஆசித்(28) உள்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பதையும் போலீசாரிடம் கைதானவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மீண்டும் இன்று காலை கோவை வந்து கரும்புக்கடையை சேர்ந்த முகமது ரியாஸ் மற்றும் அசாருதீன் ஆசித் ஆகிய 2 பேரையும் கைது செய்து கேரளாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் 4 பேரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கோவை, கேரளாவில் எந்தெந்த பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர். இங்கு மட்டும் தான் பணத்தை புழக்கத்தில் விட்டனரா? அல்லது வேறு எங்கும் இது போன்று செய்திருக்கிறார்களா? இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு வாலிபரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com