

தஞ்சாவூர்:
தெற்கு ரெயில்வே நிர்வாகம் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், டீசல் பயன்பாடு மற்றும் செலவினத்தை குறைக்கவும் ரெயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி விழுப்புரத்திலிருந்து தஞ்சை வரை 228 கி.மீ. தூரத்துக்கு ரெயில்பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக விழுப்புரம்-கடலூர் இடையேயும், 2-வது கட்டமாக கடலூர்-மயிலாடுதுறை இடையேயும் மின்மயமாக்கப்பட்டு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து 3-வது கட்டமாக மயிலாடுதுறை -தஞ்சை இடையே 73 கி.மீ. தொலைவுக்கு ரூ.320 கோடி மதிப்பில் மின்மயமாக்கல் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் செய்யப்பட்டுள்ள மின்மயமாக்கல் பணியை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் கடந்த 11-ந் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்றும், இதுதொடர்பான அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கம் விரைவில் தொடங்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரெயில்வே வாரியத்திடமிருந்து மின்சார ரெயில்கள் இயக்க ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து தஞ்சை- மயிலாடுதுறை வழித்தடத்தில் நேற்று முதல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறன.
தற்போது இந்த வழித்தடத்தில் மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரெயில், திருச்சி -தஞ்சை- சென்னை சோழன் விரைவு ரெயில், மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி விரைவு ரெயில், புவனேசுவரம் - ராமேசுவரம் வாராந்திர விரைவு ரெயில் ஆகியவை மின்சார ரெயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டன.