4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து வள்ளுவர் கோட்டத்தில் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வைகோ
வைகோ
Published on

சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி 214 விசைப்படகுகளில் 700-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (வயது 50), உச்சிப்புளி வட்டாண்வலசை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (45), திருப்புல்லாணி ஒன்றியம் தாவனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (28), மண்டபம் இலங்கை அகதி முகாமை சேர்ந்த டார்வின் சாம்சன் (27) ஆகியோரது படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியது. இதில் மீனவர்களின் படகு மூழ்கி 4 மீனவர்களும் பலியானார்கள்.

இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்களில் காயங்கள் இருந்ததால் அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வந்தது. இலங்கை கடற்படையினரின் இந்த வெறிச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com