தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் படத்திற்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி

போராட்டத்தின்போது உயிரிழந்த சுலோனின் வீட்டில் அவரது குடும்பத்தார் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உருவ படங்களுக்கு மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உருவ படங்களுக்கு மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் இறந்தனர்.

இந்த சம்பவம் நடந்து 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி காலை 6.30 மணி முதல் 10 மணி வரை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் உள்பட பலர், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, சில்வர்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உருவப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

லயன்ஸ்டவுன், பாத்திமா நகர், மடத்தூர், காந்திநகர், பூபாலராயர்புரம், கிருஷ்ண ராஜபுரம், திரேஸ்புரம் உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் போராட்டத்தின்போது உயிரிழந்த சுலோனின் வீட்டில் அவரது குடும்பத்தார் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், இறந்தவர்களின் நினைவிடங்களுக்கு சென்றும் அஞ்சலி செலுத்தினர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 17 பேருக்கு கல்வி தகுதி அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
அவருக்கும், பரிந்துரை செய்த கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு நகரின் மையப்பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து தூத்துக்குடி மைய வாடி பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com