

தோகைமலை:
தோகைமலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர், ஜாமியாலம். ஜவுளி வியாபாரி. இவரது மகன் ஜபருல்லா(வயது 27). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது
நண்பர் சிவபதி (33). நேற்று முன்தினம் டி.என்.பி.எல்.ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டு அன்று இரவு மோட்டார் சைக்கிளில் சிவபதி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஜபருல்லா, தான் தோகைமலைக்கு செல்ல வேண்டும் என்று அவரிடம் லிப்ட் கேட்டார். அதன்பேரில், ஜபருல்லாவை ஏற்றிக் கொண்டு பாதிரிப்பட்டி பிரிவு
சாலை அருகே சிவபதி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஜபருல்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சிவபதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தடுமாறி கீழே விழுந்தார்களா? அல்லது அவர்கள் மீது வேறு ஏதேனும் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதா? என்று தெரியவில்லை. இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.