பாபநாசத்தில் தலையணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

பாபநாசம் தலையணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

விக்கிரமசிங்கபுரம்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவர்வடகரை சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பொன்னுகிளி. இவர்களுடைய மகள் மாரிசெல்வி, மகன் யோக மணிகண்டன் (வயது 18).

ேயாக மணிகண்டன், தென்காசியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலையில் வைத்திலிங்கம் தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்களுடன் பாபநாசம் கோவிலுக்கு பசுவின் கன்றை கோதானமாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றார்.

அப்போது யோக மணிகண்டன் தன்னுடைய உறவினர்கள் சிலருடன் பாபநாசம் தலையணையில் குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை உறவினர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு யோக மணிகண்டனை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.

அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், விக்கிரமசிங்கபுரம் போலீசார் விரைந்து சென்று, யோக மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம் தலையணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com