

பாட்னா:
பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சட்டசபையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலை இடைக்கால சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சி நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த விஜய் குமார் சின்காவும், மெகா கூட்டணி சார்பில் அவாத் பிகாரி சவுத்ரியும் போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலவை உறுப்பினர்கள் அவையில் இருந்ததை காரணம் காட்டி, குரல் வாக்கெடுப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு அவையைச் சேர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என விதிமுறை புத்தகத்தை காட்டி முழக்கங்கள் எழுப்பினர். விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தினார். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அதன்பின்னர், மற்ற சபையைச் சேர்ந்தவர்கள் சபாநாயகர் தேர்தலுக்கு வாக்களிக்கவில்லை, ஆனால் அவர்கள் இந்த அவையில் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என இடைக்கால சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சி தெரிவித்தார்.
சபாநாயகர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடந்தபோது, சட்ட மேலவை உறுப்பினர்களான பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர் அசோக் சவுத்ரி ஆகியோர் சட்டசபையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.