

தர்மபுரி:
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் தர்மபுரி மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்கள், 2 உதவி கலெக்டர் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் மூடப்பட்டு கிடந்தன. மாவட்டம் முழுவதும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் உள்பட சுமார் 350-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலுவலர்கள் யாரும் வராததால் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. வருவாய்த்துறை அலுவலகங்கள் மூடப்பட்டதால் அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்தநிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தர்மபுரி மாவட்டத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் மாநில தலைவர் டியூக் பொன்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் சங்க மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பொருளாளர் அன்பு, துணைத்தலைவர் அசோக்குமார், மத்திய செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ராஜீவ் காந்தி நன்றி கூறினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.