நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மீண்டும் மழை

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆய்க்குடி, ராமநதி, குண்டாறு அணைப் பகுதியிலும் பரவலான மழை பெய்து வருகிறது.
மழை
மழை
Published on

தென்காசி:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் புரெவி புயல் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் பலத்த மழை பெய்தது.

இதனால் பாபநாசம் உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. பின்னர் மழை படிப்படியாக குறைந்தது. கடந்த 10 நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, கன்னடியன் அணை பகுதியில் நல்ல மழையும், நெல்லை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழையும் பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 140 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை 110 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் 140.52 அடியாகவும் உள்ளது.

நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 46 மில்லி மீட்டர் மழை பதிவானது. எட்டயபுரம், வைப்பாறு, காடல்குடி, சூரங்குடி கயத்தாறு, ஸ்ரீவைகுண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆய்க்குடி, ராமநதி, குண்டாறு அணைப் பகுதியிலும் பரவலான மழை பெய்து வருகிறது.

செங்கோட்டை சுற்று வட்டார பகுதியான பகுதியான தெற்குமேடு, புளியரை, கட்டளைகுடியிருப்பு, தவணை, கண்ணுபுள்ளிமேடு, செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது.நேற்று இரவு குற்றாலம் பகுதியில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி இன்று தண்ணீர் கொட்டியது. இதையடுத்து காலை 8 மணி முதல் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கடந்த 15-ந் தேதி முதல் குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து அங்கு தினமும் ஏராளமானவர்கள் குவிந்து வருகிறார்கள். தற்போது மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கூட்டமும் உயர்ந்துள்ளது.

ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி களில் வழக்கம் போல குளித்து வருகின்றனர். குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. மாவட்டத்தில் கடனாநதி நீர்மட்டம் 81 அடியாவும், ராமநதி உயரம் 78 அடியாகவும், அடவிநயினார் அணை 78 அடியாகவும் உள்ளது.

இன்று காலை முதல் இந்த 3 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆலங்குளத்தில் காலை 4 மணி முதல் 6 மணிவரை 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

தூத்துக்குடி மாநகர பகுதிகள் முழுவதும் அதிகாலையில் சாரல் அடித்தது. நெல்லை மாநகர பகுதியிலும், புறநகர் பகுதியிலும் இன்று பரவலாக தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com