தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

கரூரில் தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து ஏற்பட்ட தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவ னத்தை படத்தில் காணலாம்.
தீ விபத்து ஏற்பட்ட தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவ னத்தை படத்தில் காணலாம்.
Published on

கரூர்:

கரூர் மாவட்டம் ஆத்தூர் பழனியப்பன் நகரைச் சேர்ந்தவர்கள் மெய்யப்பர் மற்றும் ராஜா. இவர்கள் இருவரும் கோவை சாலையில் பேருந்து கூண்டு கட்டும் பணிக்கான பஞ்சு பொருட்கள், உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் கடையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வந்துள்ளது. இதையடுத்து புகை மூட்டத்துடன் தீப்பற்றி பயங்கரமாக எரியத்தொடங்கியது.

இதனைக் கண்ட கரூர் கோவை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடையில் பற்றிய தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவ தொடங்கியது. உடனடியாக கடை உரிமையாளர்களுக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கரூர் தீயணைப்புத்துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் கடையின் பூட்டை உடைத்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பின்னர் கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் மற்றும் போலீசார் சார்பில் ஐந்து தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு துறைக்கு உதவினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் கடைக்குள் இருந்த உதிரி பாகங்கள், பஞ்சு பொருட்கள், ஆயில் கிரீஸ் உள்ளிட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்ட கடை அருகே இருசக்கர வாகன விற்பனை நிலையமும், அங்கு 500-க்கும் மேற்பட்ட புதிய இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தது. அதிர்ஷ்டவசமாகவும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாலும் புதிய இருசக்கர வாகனங்கள் விபத்தில் இருந்து தப்பின.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com