மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம், பரிசுப் பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்று மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
பயணிகளிடம் சோதனை நடைபெற்ற போது எடுத்த படம்.
பயணிகளிடம் சோதனை நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

மதுரை:

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தொடர் சோதனை நடத்தப்படுகிறது இதற்காக போலீசார், வருமானவரித் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான வணிக நிறுவனங்கள், தொழில் அதிபர்களின் வீடுகள் ஆகியவற்றிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே மதுரை ரெயில் நிலையத்திலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த சோதனைக்கு மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு கருணாகரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோர் கொண்ட குழுவினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த பிறகே ரெயில் நிலையத்திற்குள் அனுமதித்தனர். இந்த திடீர் சோதனையால் நேற்று இரவு மதுரை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com