

தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 42). இவரது மனைவி இந்திரா (வயது 37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்திரா, கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரவீன்குமார் சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்திரா மட்டும் வீட்டில் இருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ள சத்திரப்பட்டிக்கு தினசரி சென்று ஊராட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியிடம் தொழிற்சாலையை ஒரே ஆளாக என்னால் கவனிப்பதிலும் சிக்கல் உள்ளது என்றும் கூறி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இந்திரா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
இந்தநிலையில் நேற்று காலை பிரவீன்குமார் தனது மகன்களை அழைத்துக்கொண்டு, பள்ளியில் கட்டணம் செலுத்துவதற்காக சென்றார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. அப்போது இந்திரா தனது வீட்டின் உள்பக்க அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.