

பழனி:
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் இன்று தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்காக பழனி கோவில் யானை கஸ்தூரி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக கடந்த 4-ந்தேதி யானை, பாகன்கள், கால்நடை உதவியாளர், லாரி டிரைவர்கள் என 13 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதியானது. இதனையடுத்து இன்று காலை பழனி காரமடை தோட்டத்தில் இருந்து கிருமிநாசினி மருந்து கொண்டு தெளிக்கப்பட்ட லாரியில் கோவில் யானை கஸ்தூரி ஏற்றப்பட்டு முகாமிற்கு உற்சாகமாக சென்றது.
யானையின் தற்போதைய எடை 4500 கிலோ ஆகும். 55 வயதாகும் கஸ்தூரி தேக்கம்பட்டியில் நடந்த அனைத்து முகாம்களிலும் உற்சாகமாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் முகாமில் சோர்வாக இருக்கும் மற்ற யானைகளை உற்சாகப்படுத்தும் வகையில் கும்கியை போல செயல்பட்டு வந்துள்ளது. யானையுடன் 3 பாகன்கள், கால்நடை மருத்துவர் ஆகியோர் உடன் சென்றனர்.