ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 1,300 கடைகளுக்கு நோட்டீஸ் - மறு ஏலம் விடப்படும் என எச்சரிக்கை

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 1,300 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதுடன், மறு ஏலம் விடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஊட்டி:

ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளில் வாடகை தொகை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. ரூ.10 கோடிக்கும் மேல் பாக்கி தொகை இருந்ததால் போதிய நிதி இல்லை.

எனவே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் வாடகை கட்டணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின்படி கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடைகளின் அளவீடை பொறுத்து வியாபாரிகள் செலுத்த வேண்டிய வாடகையை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

அதில் நகராட்சிக்கு சொந்தமான கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருபவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை குறிப்பிட்டபடி செலுத்தவில்லை. பலமுறை தங்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை செலுத்தப்படவில்லை. எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களுக்குள் கடை வாடகை முழுவதையும் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் குத்தகை நிபந்தனைகளின்படி கடையின் குத்தகையை ரத்து செய்து, மறுஏலம் விட்டு அதனால் நகராட்சிக்கு ஏற்படும் இழப்புகளை சட்டப்படி தங்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com