விருது தொகை ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் என்.சங்கரய்யா

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டு என்.சங்கரய்யாவுக்கு வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சங்கரய்யா
சங்கரய்யா
Published on

சென்னை:

தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ‘தகைசால் தமிழர்' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. முதல் விருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா பெற உள்ளார். தனக்கு வழங்கப்பட இருக்கிற விருதுக்கு என்.சங்கரய்யா பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து என்.சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக்கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையினை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதல்-அமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன்.

எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com