

நெல்லை:
கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் குழந்தையுடன் அனாதையாக ஒரு பெண் தவித்து நின்றார். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள் அந்த பெண்ணின் நிலையை அறிந்து போலீசாரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் அவரை மீட்டு மாநகராட்சி முகாமில் சேர்த்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு பவானி என்ற மனைவியும், பூஜா என்ற மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சங்கர் தனது மனைவி பவானியை திருத்தணி முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் பவானியையும், குழந்தை பூஜாவையும் அங்கேயே விட்டுவிட்டு சங்கர் தனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். கணவர் தன்னை வேண்டுமென்றே தொலைத்துவிட்டு சென்றதை பவானி அறிந்தார்.
அதன்பின்னர் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் வெளியூரில் சென்று பிழைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தார்.
இதற்காக அவர் நெல்லை வந்ததும், அந்த பெண்தான் பவானி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 9 மாதங்களாக தங்கி இருந்த பவானியின் முகவரியை கண்டுபிடித்த போலீசார் அவரது பெற்றோர் சென்னையில் இருப்பதை அறிந்தனர்.
அங்கு சென்று பவானியின் பெற்றோர் அர்ச்சுனன் - முனியபாய் ஆகியோரிடம் விபரத்தை கூறி நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாநகராட்சி முகாமுக்கு வந்த அவர்கள் பவானி, அவருடைய குழந்தை பூஜை இருவரையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தனது மகள் காணாமல் போனது குறித்து சங்கரிடம் விசாரித்தோம். ஆனால் அவர் பதில் கூறவில்லை. இதனால் கடந்த 2 வருடங்களாக எங்களது மகளையும், குழந்தையும் தேடி அலைந்தோம்.
தற்போது நெல்லை மாவட்ட போலீசார் மற்றும் மாநகராட்சியினரால் எங்களது மகள் கிடைத்து விட்டாள். மாநகராட்சி கமிஷனர் கண்ணனுக்கு நன்றி என கூறிவிட்டு மகளை சென்னைக்கு அழைத்து சென்றனர்.