

பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அண்ணா சிலை அருகில் இறைச்சிக் கடை வைத்திருந்தவர் செல்வம் (வயது45). இவருடைய இறைச்சிக் கடையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த செல்வம் இதை கண்டித்துள்ளார். இதனால் மது அருந்தி கொண்டிருந்தவர்களுக்கும், செல்வத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒருவர் அரிவாளால் செல்வத்தை வெட்டியுள்ளார். அதை தடுக்க வந்த அதேபகுதியை சேர்ந்த அனந்தகிருஷ்ணன் (23) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. கழுத்தில் வெட்டப்பட்ட செல்வம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக செல்வத்தை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த அனந்தகிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனை சவ கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட செல்வத்திற்கு வேதவள்ளி என்ற மனைவியும், அம்பிகா என்ற மகளும், ராம்குமார் என்ற மகனும் உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி அண்ணா சிலை அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்குபவர்கள் சாலையோரங்களிலும், கால்நடை மருத்துவமனை பகுதியிலும், அண்ணாசிலை அருகில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே திருக்காட்டுப்பள்ளி போலீசார் கொலை சம்பந்தமாக சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.