ஈரோடு ஓடைமேட்டில் மதுரை வீரன் கோவிலில் உண்டியல் திருட்டு

ஈரோடு ஓடைமேட்டில் உள்ள மதுரை வீரன் கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு ஓடைமேட்டில் கொள்ளை நடந்த மதுரைவீரன் கோவிலை படத்தில் காணலாம்.
ஈரோடு ஓடைமேட்டில் கொள்ளை நடந்த மதுரைவீரன் கோவிலை படத்தில் காணலாம்.
Published on

ஈரோடு:

ஈரோடு பழையபாளையம் ஓடைமேட்டில் மதுரை வீரன், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பூஜை நடப்பது வழக்கம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து கோவில் நடை பூட்டப்பட்டது. இந்த கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டு உள்ள 2 உண்டியல்கள் கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, கோவிலுக்குள் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியல்களையும் திருடினர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அருகே உள்ள ரோட்டில் வீசி சென்றுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

திருட்டு நடந்த கோவில் மற்றும் அதன் அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி கூறும்போது, ‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோவில் உண்டியலை திறக்கவில்லை. இதனால் உண்டியலில் ரூ.4 லட்சம் வரை இருந்திருக்கக்கூடும். இதை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

ஐம்பொன் சிலைகள், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த அம்மன் நகைகள் எதுவும் திருடு போகவில்லை. இதனால் கோவிலை பற்றி நன்கு அறிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும்’ என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com