

திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு ஏராளமான வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதுபோல் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.
இந்நிலையில் மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. இருப்பினும் மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகமாக வந்து தங்களுக்கு தேவையான பூக்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூவின் விலை உயர்வாக இருந்தது. பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை பூ வரத்து குறைவால் மல்லிகை பூவின் விலை கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் ரூ.400 உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுபோல் மற்ற பூக்களின் விலை வருமாறு:- ஒரு கிலோ அரளி ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், பிச்சி ரூ.600-க்கும், முல்லை ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ நிலக்கோட்டை மற்றும் சத்தியில் இருந்து சுமார் 200 கிலோ விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.